இதய வலியால் அவதிப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் : தமிழக மருத்துவர்கள் சாதனை...!!

கோவை: பிறக்கும் போதே ஒரு பக்க நுரையீரல் இல்லாமல், இதய நோயால் அவதிப்பட்ட 13 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
பண்ணாரி அடுத்த பசுவபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்; கூலி தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி(13); அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாள். குழந்தைப் பருவத்தில் இருந்தே, அடிக்கடி சளி, இருமல் பாதிப்பு புவனேஸ்வரிக்கு இருந்தது. கடந்த சில மாதங்களாக நெஞ்சு வலியாலும் அவதிப்பட்டாள். இதை தொடர்ந்து இவளது பெற்றோர், அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்ற போது பரிசோதித்த டாக்டர்கள், புவனேஸ்வரிக்கு காச நோய் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறி, அதற்கான சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.
இதன் பேரில் தங்கராஜ், கடந்த மாதம் கோவை அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரியை சிகிச்சைக்காக அனுமதித்தார். அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரிக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அவளுக்கு இடது புற நுரையீரல் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன், சுத்த ரத்தக்குழாய் மற்றும் அசுத்த ரத்தக்குழாய்களில் இடையே உள்ள துவாரத்தின் வழியே இரு ரத்தமும் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் டாக்டர் ஜெயராமன் தலைமையில், டாக்டர்கள் வனிதா மணி, ராதிகா, சுகந்தி ஆகியோர் அடங்கிய குழு, புவனேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
இதய அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் ஜெயராமன் கூறியதாவது: நோயாளியை பரிசோதனை செய்யும் போது, அவருக்கு பிறவியிலேயே ஒரு நுரையீரல் மட்டுமே இருப்பது தெரிந்தது. இடது புறம் இதயத்துக்கு மேல்புறம் இருக்க வேண்டிய நுரையீரல் இவருக்கு இல்லை. லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இது போன்று இருக்கும். ஒரு கிட்னியுடன் எப்படி வாழ முடியுமோ, அப்படியே ஒரு நுரையீரலுடனும் வாழலாம். இவ்வாறு பிறக்கும் 50 சதவீதம் குழந்தைகளுக்கு இதய கோளாறு இருக்கும்; இதய துவாரங்களுடன் இக்குழந்தைகள் இருப்பர்.
தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி புவனேஸ்வரிக்கு, இதய பிரச்னையுடன், இதயத்தில் இருந்து வெளியேறும் சுத்த ரத்த பெரிய தமனியும், அசுத்த ரத்த பெருஞ்சிரையும் கலந்தால் ஆபத்து என்பது தெரிந்தது. இதனால், புவனேஸ்வரிக்கு வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சியும், பெண்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் இயற்கையான நிகழ்வுகளும் ஏற்படாமல் குழந்தையாகவே உள்ளார். இடது புறம் இதயம் இருப்பதால், நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வது கடினம்.
அதனால், முதுகு பகுதியை ஒட்டி இதயத்துக்கு எந்த பாதிப்பும் வராமல், இரு ரத்தக்குழாயையும் இணைத்திருந்த பாகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினோம். கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது; இனி, எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவைப்படாது. உடலும் வயதுக்கேற்ற வளர்ச்சி அடையும். இவ்வாறு டாக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.
நன்றி:தினமலர்

Posted in |

0 comments: