தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி.........!!!


தங்கம் விலை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.500 குறைந்தது. கடந்த சில மாதங்களாக எட்டா உயரத்திலிருந்த தங்கம், இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவரத் துவங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து இறங்கி வருவது தான். "கமாடிட்டி மார்க்கெட்' என சொல்லப்படும் ஆன்-லைனில் நடக்கும் பொருட்கள் சந்தையில் இதுவரை தங்கத்தில் முதலீடு செய்திருந்தவர்கள் கச்சா எண்ணெய் பக்கம் தங்கள் முதலீடுகளை மாற்றிக் கொண்டு வருவதால் தங்கம் விலை குறைந்து வருகிறது. போதாக் குறைக்கு அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ மதிப்பு குறைந்து வருவதும் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
சர்வதேச அளவில் நேற்று காலை ஒரு அவுன்ஸ் தங்கம் 825.90 டாலராக இருந்தது. வர்த்தக முடிவில் இது 801.90 டாலராகக் குறைந்தது. மற்றொரு பக்கம் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 113 டாலர் வரை நேற்று வந்ததன் காரணமாக, பலரும் தங்கத்தில் செய்திருந்த முதலீட்டை விட்டு, எண்ணெய் பக்கம் சாய்ந்தனர். மும்பையில் சுத்த தங்கம் (24 காரட்) கிராம் ஆயிரத்து 100லிருந்து 945 வரை சரிந்தது. ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆயிரத்து 96ஆக இருந்தது. நேற்று ஆயிரத்து 33 ஆக குறைந்தது. இதனால், ஒரு சவரனுக்கு 504 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 8 ஆயிரத்து 264 ஆக இருந்தது. இது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு விலை குறைந்தது. ஆடி மாதம் முடிந்து அடுத்து ஆவணி பிறக்க இருப்பதால், விலை குறைவைப் பயன்படுத்தி தங்க நகைகளை வாங்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக ஆடித் தள்ளுபடியில் துணிகள் வாங்குவதற்குப் பதில் நகைகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டத்தை நகைக் கடைகளில் அதிகம் பார்க்க முடிகிறது.

Posted in |

0 comments: