ஆடி கிருத்திகை திருவிழா : திருத்தணியில் பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி: ஆடிக்கிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து முருகனை தரிசனம் செய்தனர்.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் தெப்பத் திருவிழா சிறப்பாக நடந்தது. இதை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி வந்தனர். பல பக்தர்கள் காவடி எடுத்து, பாத யாத்திரையாக வந்து சுவாமியை தரிசித்தனர்.மேல் திருத்தணி நல்லாங்குளம் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளத்தில், பக்தர்கள் காவடியுடன் புனித நீராடினர்.
பக்திப் பாடல்கள் பாடிக் கொண்டு மலைப்படிகள் வழியாக காவடி எடுத்து, தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பெரும்பாலானோர் காவடி எடுத்து வந்து, மொட்டை அடித்து புனித நீராடினர். சிலர் பம்பை, உடுக்கை, சிலம்பு ஆட்டத்துடன் ஆடிக் கொண்டு மலைக்கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்த, உடல் முழுவதும் அலகு குத்திக் கொண்டு முருகனை வழிபட்டனர்.மூலவர் முருகனுக்கு மரகதக்கல், தங்கக் கிரீடம், தங்க வேல் மற்றும் நகை அலங்காரம், புஷ்ப அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
பழநி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு வகையான மலர்களால், முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. திருப்பதி மலைக்கோவிலில் இருந்து சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இதே போல், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட "கியூ' வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
தெப்பத் திருவிழா: நேற்று தெப்பத் திருவிழாவில் மலைக்கோவிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளத்திற்கு வருகை தந்தார். மாலை 6.30 மணிக்கு தெப்பத்தில் உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேக, அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. முருகன் தெப்பத்தை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு பாலித்தார்.
* சிவா (சென்னை) *

Posted in |

0 comments: